Friday, June 29, 2018

நடிகையர் திலகம் :

நல்ல அனுபவம்..
சாவித்திரிப் பற்றி நிறைய explore செய்ய தூண்டியது...

கீர்த்தி சுரேஷ் You beauty.
What a stunning performance..
அப்படியே சாவித்திரியை மீட்டுருவாக்கம் செய்திருக்கார்.
மாயாபஜார் பட பாடல் எல்லாம் அட்டகாசம்.
கேரியர் ஆரம்பித்திலிருந்து முடிவு வரை அவரின் தோற்றத்தில் நடிப்பில் சிறந்த Transformation.
இந்த கடின உழைப்புக்காகவே கீர்த்தி சுரேஷை கொண்டாட வேண்டும்.

துல்கர் மிகவும் பிடித்த நடிகர்..  இதிலும் சிறந்த நடிப்பு.. ஆனால் ஏனோ ஜெமினியாக அவரை உள்வாங்க முடியவில்லை ..
ஆனால்  படத்தில் கீர்த்தியை (சாவித்தியை) "அம்மாடி" என்று அழைக்கும் அந்த அழகுக்காகவே துல்கருக்கு முத்தங்கள்..
அந்த "அம்மாடி" என்ற ஒற்றை வார்த்தை கடத்தும் உணர்வு அலாதியானது.

சாவித்திரியின் பெருமை அதிகமாகவே இருப்பது, இது ஒரு Honest Biopic இல்லையோ என்று தோன்றுகிறது. ஜெமினியைப் பற்றியும் மேலோட்டமாக தொட்டுவிட்டு வில்லனாக மட்டும் பிரதிபலிப்பது பெரிய உறுத்தல்.. அது உண்மையாகக் கூட இருக்கலாம். படத்தில் ஜெமினி தான் சாவித்திரிக்கு குடியை அறிமுகப்படுவது போல் காட்சி உண்டு. ஆனால் சாவித்தியின் மகளே ஒரு பேட்டியில் சாவித்திரியின் குடிப்பழக்கம் ஜெமினியால் அல்ல. ஆனால் அவருடன் ஏற்பட்ட ego பிரச்சினை பின் ஜெமினி நான்காவதாக இன்னொரு பெண்ணை மணம் முடித்தது போன்ற காரணங்களால் குடிப்பழக்கம் அதிகமானது என்று கூறியுள்ளார்.

எதற்கும் உதவாத அந்த சமந்தா - விஜய் தேவரகொண்டா காட்சிகள் இல்லாமல் சாவித்திரி யின் வாழ்க்கையை, ஜெமினி-சாவத்தரி உறவை இன்னும் explore செய்திருந்தால் அருமையாக வந்திருக்கும்.

Must watch for Keerthy Suresh.. 😘😘

Thursday, June 14, 2018

காலா & ரஞ்சித் :

சமூக போராட்டங்களில் சில நேரடி இழப்புகளின் பின்னணியில் இருந்து வந்தவன் நான், 1985 ஆம் ஆண்டு உடல் முழுக்க அரிவாளால் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஒரு குடிசையின் வாசலில் விழ, அங்கிருந்த இளைஞன் நிலைகுலைந்த அந்த மனிதரை இழுத்து வீட்டுக்குள் கிடாசி, ரத்தக்கரையை அவசர அவசரமாக ஆற்று மணலால் மூடி, தேடி ஓடி வந்தவர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்டு உயிர் பிழைத்த அந்த மனிதர் என் அப்பா. அந்த இளைஞன் இல்லையேல் என் தந்தையை நான் இரண்டு வயதில் இழந்திருப்பேன்.

1991 ஆம் ஆண்டு, டீ கடையில் வைத்து சரமாரியாக வெட்டப்பட்டு, குடம் குடமாக ரத்தம் வழிந்த நிலையிலேயே காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார் என் மாமனார். தந்தையை இழந்த போது என் மனைவிக்கு வயது எட்டு.

உயிர் பிழைத்த என் தந்தையும் சரி, குடும்பத்தலைவனை இழந்த என் மாமனார் குடும்பமும் சரி, பதிலுக்கு பதில் என்று பழி வாங்கிக்கொண்டிருந்தால் கும்பல் கும்பலாக பெரும் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையறிந்து, அனைத்தையும் மறந்து  தன் அடுத்த தலைமுறையை படிக்க வைக்க அறிவுத்தளத்தை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.

காலாவில் கரிகாலன் யார்? கரிகாலனின் போராட்ட வரலாறு என்ன? அவர் தாராவிக்கு என்ன செய்தார்? போன்ற கேள்விகளையெல்லாம் படத்தை பார்த்து நிறைய பேர் எழுப்பியிருந்ததை கவனித்தேன். அதற்கான பதிலாக தான் நான் மேலே இரண்டு சம்பவங்களில் இருந்து இந்த பதிவை தொடங்கினேன்.

காலா @ கரிகாலன் அந்த பகுதியின் நிலத்தை அபகரிக்கும் சூழ்ச்சிகளில் தன் தந்தையை இழந்து, அந்த இழப்பை அத்தோடு நிறுத்த வேண்டுமென தன் வாழ்க்கை திசையை திருப்பி தன்னால் முடிந்ததை செய்துகொண்டிருந்தவன்.

சொல்லப்போனால் "காலா தாராவிக்கு என்ன செய்தார்?" என்கிற கேள்வி அந்த படத்திலேயே இரண்டு இடங்களில் வருகிறது, காலாவின் மகன் லெனின் கோவத்தோடு கேட்கிறான், செரீனாவும் கோவத்தோடு கேட்கிறாள். நான் இன்னென்ன செய்தேன் என்று காலாவால் பட்டியலிட முடியவில்லையே தவிர, அந்த பகுதியை அபகரிக்க நினைப்பவர்களுக்கு தடுப்பு சக்தியாக இருப்பதே போதுமென, நிலத்தை அபகரிக்கும் நவீன சூழ்ச்சிகளை தனது அனுபவத்தால் விரட்டிக்கொண்டிருக்கும் கதாபாத்திரம் தான் காலா.

அதை இரண்டு காட்சியில் மிக தீர்க்கமாக சொல்லவும் செய்கிறார்,

1 . NGO வின் கூட்டத்தில் "இந்த அரசாங்கம் நினைத்தால் அவரவர் இருக்கும் இடத்திலேயே வீடு கட்டி கொடுக்கலாம், ஆனால் குடியிருப்பு என்று மேலும் கீழுமாய் மொத்தமாய் மக்களை குவிப்பது என்பது பெரும்பான்மை நிலப்பரப்பை அபகரிப்பதற்காக தான்.

2 . மகன் லெனினிடம் பேசும் போது அவனது காதலி புயலின் குடியிருப்பை மேற்கோள் காட்டி, "பதினைந்து பேர் ஒரே வீட்டில் அடைந்து வாழுறதுக்கு எதுக்கு அடுக்குமாடி? housing board ல மட்டுமே என்ன சௌகரியம் வந்துடுது?"

போன்ற விவகாரங்களையெல்லாம், மாடி வீடு என்னும் மாய வலைக்குள் வளர்ச்சி என்கிற பெயரில் நிலத்தை இழப்பதை சுட்டி காட்டுகிற கிழமாக அந்த பகுதியில் காலா வாழ்கிறார்.

ரஜினி தன் வாயால் அம்பேத்கரிய கொள்கைகளை பேசவில்லை, பெரியார் கொள்கைகளை பேசவில்லை, மார்க்சிய கொள்கைகளை பேசவில்லை, மாறாக அந்த நிலப்பரப்புக்கான சித்தாந்தத்தை, தத்துவத்தை அந்த மண்ணில் இருந்து எடுக்கும் கதாபாத்திரமாக தான் காலா சித்தரிக்கப்பட்டிருக்கிறார்.

காலாவுக்கும் மகன் லெனினுக்குமான வாக்குவாதத்தை இடதுசாரிகளை கேள்விகேட்கும் குறியீடு என்று நண்பர்கள் பலர் பதிவிட்டு இருந்தார்கள். அது இடதுசாரிகளுக்கு எதிரான குறியீடு அல்ல, நாம் கற்றிருப்பது எத்தனை வலிமையான சித்தாந்தங்களாக இருந்தாலும், அவை உலக தலைவர்களால் போற்றப்பட்டவையாக இருந்தாலும், சொந்த மக்களை, சொந்த மண்ணை புரிந்துக்கொள்ளாத எந்த சித்தாந்தமும் வீண் என்பதின் குறியீடு மட்டுமே அது.

"உன் வீட்டை மொதல்ல பாரு, உன் தெருவை பார், உன் ஊரை பாரு, அங்கையே எல்லாமே கொட்டிக்கிடக்குது, அதை விட்டுட்டு சமூகத்துக்கான அரசியலை புத்தகத்துல தேடினா எப்படி கிடைக்கும்?" என்கிற கருத்தை தான் பா.ரஞ்சித் அங்கே நிறுவியிருக்கிறார். முதல் பாதியில் அடுத்தவரை நம்பியிருக்கும் லெனின், பிற்பாதியில் தன் பகுதிக்கு தேவையானதை தானே செய்கிறான், இது தான் காலாவுக்கான தத்துவம், தாரவிக்கான  தத்துவம், ஒரு மண்ணுக்கான தத்துவம்.

அந்த மக்களுக்கு நீ ஒண்ணுமே செய்யலைனாலும் பரவாயில்லை, ஆனா அந்த மக்கள் அப்படி இருக்கிறதுக்கு அந்த மக்களே தான் காரணம் என்கிற கருத்தை எதிரொலிக்கும் "சேரி புத்தி" என்று தனது மகன் சொல்லும் போது அவனுக்கு கன்னத்தில் விழும் அறை, இந்த சமூகத்துக்கான அறை. எத்தனை முறை இந்த சமூகம் சொல்லியிருக்கும்? "அவுங்க இப்படி இருக்கிறதனால தான் யாருமே மதிக்க மாற்றங்க" இந்த வாக்கியத்தை இதுவரை உச்சரித்த ஒவ்வொரு சாதி இந்தியனுக்குமான அடி அது.

காலாவை மட்டுமே தாராவி நம்பி இருக்கிறது என்று எங்குமே இந்த படம் சித்தரிக்கவில்லை, காலாவை கண்டால் தாரவியே பயந்து நடுங்கும் என்றும் சித்தரிக்கப்படவில்லை. காலாவை அந்த ஊர்க்காரனே அடிக்க கை ஓங்குகிறான், அதை பார்த்து ராஜினியின் கண்கள் சிவக்கவில்லை. ரஜினி முன் பேச யாரும் பயப்படவில்லை, மகன் கேள்வி கேட்கிறான், எதிர்கால மருமகள் கேள்வி கேட்கிறாள், பழைய காதலி கோவத்தோடு கேள்வி கேட்கிறாள். நாட்டாமை படத்தில் அண்ணன் சரத்குமாரின் ஊஞ்சலில் மீனா அமர்ந்து புத்தகம் படிப்பதை பார்க்கிற அனைவருமே பதற்றத்துடன் ஏதோ நடக்க கூடாத ஒன்று நடந்து விட்டதை போன்று பீதியடையும் எந்த வெத்து வெட்டு காட்சியமைப்பும் இல்லை.

அந்த மக்களின் மீதும், அந்த நிலத்தின் மீதும் அக்கறை கொண்டு எதுவொன்றென்றாலும் முதல் ஆளாய் நிற்கும் கதாபாத்திரம் மட்டுமே காலா. ஏனினில் தனி நபர்களை நம்பி ஆட்டுமந்தைகளை போல பின்னாலவே போகாமல், ஒவ்வொருவருக்கும் தலைமை பண்பும், ஒவ்வொருவரும் தலைவராக, ஒவ்வொருவரும் அந்த நிலத்தின் மீது உரிமை கொண்டவராக இருக்க வேண்டுமென்று திட்டமிட்டு தான், காலா என்னும் தனி நபருக்கான action, build up, டயலாக் குறைக்கப்பட்டு, உரிமை குரல்கள் தாராவியெங்கும் பரவிக்கிடக்கவேண்டுமென இறுதிக்காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

இதில் ஹரி தாதா கதாபாத்திரம் ஏற்றிருக்கும் நானா படேகர் திரைப்படத்தில் பிரதமர் இல்லை, மும்பையின் முதல்வர் இல்லை. ஆனால் அதை விட முக்கியமான குறியீடு. இந்திய நிலப்பரப்பின் அரசியலை பொறுத்தவரை இங்கே குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினரை திருப்தி, குஷி படுத்த தான் ஆளும் அரசாங்கங்கள் இருக்கிறது, சமூகத்தின் நேரடி அதிகாரம் அவர்களிடம் தான் இருக்கிறது, ஆட்சியில் யார் இருந்தாலும் இல்லாமல் போனாலும், அவர்களை சுற்றி தான் எல்லாமே இங்கே அரங்கேறுகிறது, தேர்தல் அரசியல் மூலம் வரும் power politics என்பது தற்காலிகம். ஆனால் அதை தாண்டிய நிரந்தரமான ஒரு power politics இங்கே எப்போதுமே உண்டு, அப்படியான கதாபாத்திரமாக தான் ஹரி தாதா வருகிறார்.

சுரண்டப்படும் மக்களுக்கு விழிப்புணர்வு வரும் வரை தான் இந்த சக்திகள் இங்கே நீடித்திருக்க முடியும், அது தூய வடிவத்தில் நம் வீடுகளில் குடியேறியிருக்கிறது, துரத்தவே முடியாத அளவுக்கு நம் கட்டமைப்பில் வலுவாக இருக்கிறது, அந்த சக்திகளின் மாயவலைகளில் இருந்து இந்த மக்கள் மீண்டால் அது எந்தப் புனிதக்குறியீடானாலும் அதற்கு அழிவு நிச்சயம், நமக்கு விடுதலை நிச்சயம் என்பதை தான் சினிமா திரைக்கதைக்காக நானா படேகர் இருந்தாலும், அவர் ஒரு சித்தாந்த குறியீடு மட்டுமே. கருப்பு, நீலம், சிவப்பு இதை அழிக்க  வல்லது என்று முடிகிறது படம்.

இணையம் வந்து கண்ணில் படும் குறியீடுகளை எல்லாம் அவரவர் புரிதலில் பதிவு செய்யும் வசதி நமக்கிருக்கிறது, ஆனால்; குறியீடே இல்லாமல் எத்தனை ஆயிரக்கணக்கான பிற்போக்கு கருத்தியல்களை நாம் இந்த சினிமாவில் கடந்து வந்திருக்கிறோம்? அவை எத்தனை ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு எதிரானவை, எத்தனை பெண்களுக்கு எதிரானவை என்று எண்ணியிருக்கிறோமா?

"என் அக்கா என்ன பொழங்காத சாதியிலா கல்யாணம் பண்ணிக்கிட்டா?" என்று நடிகர் ஜெயராமன் முறைமாமன் படத்தில் ஒரு காமடி காட்சியில் சொல்வார், எவ்வளவு வெக்கம் கெட்டு அந்த காட்சிக்கு நாம் சிரித்திருக்கிறோம்? எந்த சாதியென்று நேரடியாக சொல்லாமல் போனாலும், பொழங்காத சாதி என்றும் ஒன்று உண்டா? அப்படியெனில் அது யார்? என்கிற எந்த மேல் கேள்வியும் எழாமல் எத்தனையோ ஒடுக்குமுறை காட்சிகளை, பொதுப்புத்தி காட்சிகளை, எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல் கடந்து வந்திருக்கிறோம் நாம். இதற்கெல்லாம் விடிவெள்ளியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை, பெண்களின் இயல்பை பேரழகாக சித்தரிக்கும் எல்லா காட்சியையும் நாங்கள் frame by frame கொண்டாடுவோம், பேசுவோம், அகமகிழ்வோம், விவாதிப்போம், "இதை பாருங்கடா" என்று கர்வமாக சொல்வோம்.

இது ரஞ்சித் படம் என்பதால் தாராவியில் அம்பேத்கரை அவர் வலிந்து திணிக்கவில்லை. தாராவியில் ரெட்டை மலை சீனிவாசன் சதுக்கம் உள்ளது, எந்த பக்கம் திரும்பினாலும் அம்பேத்கர் புகைப்படம் உள்ளது, காமராஜர் பெயரில் பள்ளிக்கூடம் உண்டு, பெரியார் சதுக்கம் உள்ளது, பெரியாருக்கு சிலை உள்ளது, இது அனைத்துமே தாரவியின் அடையாளம்.

"அம்பேத்கர் புகைப்படம் எதற்கு?" என்று ரஞ்சித்தை கேட்காதீர்கள், இதற்கு முன் மும்பையின் சேரி கலாச்சாரத்தை படம் பிடித்தவர்களை கேளுங்கள், உங்கள் frame களில் அங்கிருந்த அம்பேத்கர் எப்படி மாயமானார் என்று கேளுங்கள். "தாராவியை படம் பிடித்த போது தெருத் தெருவாக அங்கிருக்கும் அம்பேத்கரின் புகைப்படம் ஏன் உங்கள் கேமராவில் சிக்கவில்லை?" என்று கடந்த காலத்தில் படம் பிடித்தவர்களை கேளுங்கள்.

திரைப்பட உருவாக்கத்தை பற்றி தனியே எழுதலாம், மலையாள படத்திற்கு ஒரு மனநிலையோடும், தமிழ் படத்திற்கும் ஒரு மனநிலையோடும் பார்க்க பழகி விட்டோம், தமிழ் சினிமாவும் மலையாள வரிசையின் கிளாசிக் சீரியஸ் போல அடுத்தடுத்து படங்கள் இங்கே வர ஆரம்பித்தால், காலாவை காதலுக்காகவே அந்த வரிசையில் அடுக்கி வைக்கலாம். பார்க்க பார்க்க சலிக்காத கிளாசிக் படமாக அது எதிர்காலத்தில் இருக்க போகிறது என்பதனை காலம் தான் உணர்த்தும். மிகைப்படுத்தாத எந்த உணர்வும் காலத்தால் வெல்லும்.

தர்க்க ரீதியாக சிக்குவான் என்று ஒவ்வொரு முறையும் பா.ரஞ்சித்தை கட்டம் கட்ட ஒரு கூட்டமுண்டு, எதன் பிடிக்குள்ளும் சிக்காத 35 வயதான அந்த இளைஞனின் தீர்க்கமான சமூக பார்வை முற்போக்கு பேசும் சிலருக்கே கூட தொண்டையின் குண்டு கீழிறிங்கி மேலேறுகிறது. ஆடுகளம் படத்தின் பேட்டைக்காரன் தனுஷின் சாதுரியத்தை பார்த்து பதிலேதும் பேசமுடியாமல் வீழ்த்த நினைப்பதை போல, வீழ்வான் என்று காத்திருக்கிறார்கள். வீழ்ச்சி என்பது படத்தின் வெற்றி தோல்வியிலில்லை.

பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், சிறுபான்மை மதத்தவர், நிற ஒடுக்குமுறை, திருநங்கை உட்பட மாற்று பாலினத்தார், LGBT தோழர்கள் என்று, இந்த சமூகத்தை குறித்து தீர்க்கமான சமூக பார்வை பா.ரஞ்சித்திடம் உண்டு. காலா உங்களுக்கு ஒரு திரைப்படமாக பிடித்திருக்கிறதா இல்லையா என்பது என்னைப்பொறுத்தவரை விவாதப்பொருளல்ல. காட்சி ஊடகங்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்போடு இயங்கக்கூடிய, சித்தரிக்கக்கூடிய பண்பும், அறிவுமே ரஞ்சித்தின் வெற்றி, பலம்.

அது இருக்கும் வரை இங்கே ஒவ்வொரு காலாவும் கொண்டாடப்படும்♥

- வாசுகி பாஸ்கர் 

Saturday, March 17, 2018

இன்று என்னிடம் ஒருவர் கேட்டார், “கௌசல்யா மறுமணம் செய்துக்கொண்டால் அது சரியா தவறா?”
எந்த கௌசல்யா?
உடுமலை சங்கரின் மனைவி புரட்சிபெண் கௌசல்யா.....
அது கௌசல்யாவின் விருப்பம்.
என்னை கேட்டால்: கணவனின் பெயரை தன் பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வது, அவன் நினைவாகவே வாழ்ந்து இல்லறம் துறப்பது என்பதெல்லாம் கண்ணகி பிராண்ட் பிற்போக்குத்தனம்.
உண்மையில் கண்ணகி என் மகளாக இருந்திருந்தால், “கோவலன் கிடக்குறான்- அவனுக்காக என் மகளோட வாழ்க்கை வீணாகனுமா! நோ வே”, என்று நிச்சயம் அவளை மீட்டு, மன ஆறுதல் செய்து, அவள் விரும்பினால் மறுமணம் செய்வித்திருப்பேன்.....
அப்படியானால் கௌசி?
சின்ன பெண், இப்போது தான் வாழ்வை அதன் எல்லா கோணங்களிலும் பார்க்கிறாள், தன் ஆற்றல்களை புரிந்துக்கொள்கிறாள். காலம் இன்னொரு காதலை நிச்சயம் கொண்டு வரும், அப்போது “ஏககணவன் செண்டிமெண்ட்” பேசிக்கொண்டு பிற்போக்காய் தேங்கி இல்லாமல், துணிந்து மறுமணம் செய்து, இல்லறத்தில் தழைத்து அடுத்த தலைமுறை புரட்சி குட்டிகளை பல்கி பெறுக செய்ய வேண்டும்.....
ஆனால் சமுதாயம் சும்மா இருக்குமா? அப்போது சங்கர் மீது இருந்த காதல் பொய்யா? நீ நல்லவளா என்று கேட்குமே?
இந்த “நல்லவனு நிருபவித்து காட்டு” நாடகத்தை எல்லாம் நம்பி தீ குளித்துக்காட்ட அவள் என்ன சீதையா? அவள் கௌசல்யா.
காதல் என்பது ஒரே ஒரு முறை தான் மலரும் என்கிற அந்த கருமாந்திர கற்பிதத்தை இன்னுமா இந்த உலகம் நம்புகிறது?!
இதனால் சகலமானவர்களும் சொல்லிக்கொள்கிறேன்.....
பல முறை பூக்கும் பெருமரம் காதல்
மறுமணம் என்பது இயற்கையின் நியதி
அற்ப செண்டிமெண்ட் பேசி
இளம் பெண்களின் வாழ்வில் தலையிடுவது
அநாகரீகம் மட்டுமல்ல, சேடிஸம்.
உங்கள் மகளுக்கு இப்படி நேர்ந்தால்
“இப்படியே இருந்துடு” என்பீர்களா?
புரட்சிக்காரி என்ற பிம்பத்தினுள்ளேயே
அவளை சிறை வைப்பீர்களா?
எந்த கட்டமைப்பிற்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல்
கலக்கும்மா நீ கௌசல்யா!

- ஷாலினி (மனநல மருத்துவர், ஆலோசகர்)

Sunday, February 25, 2018

விழுப்புரம் சாதி படுகொலை

விழுப்புரத்தில் அந்தப் பெண் குழந்தையைத் தொடும்போது அந்த சாதிவெறியர்களின் வீட்டுப் பெண்குழந்தைகளின் முகம் அவர்களுக்கு ஒருநொடி கூடவா வந்துபோகவில்லை?  8 வயது சிறுவனை முகம் சிதையும் அளவிற்கு அடித்துக் கொல்வதற்கு எப்படி மனம் வருகிறது?

இனம், சாதி என பிறப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் ஆதிக்க மனநிலை முற்றிப்போனவர்களுக்கு தங்களைவிட தாழ்வாக அவர்கள் நினைக்கும் இனத்தைச் சேர்ந்த மனிதர்கள், மனிதர்களாகவே தெரிவதில்லை.  உலகில் நடந்த/நடக்கும் இனப்படுகொலைகளுக்கெல்லாம் இதுதான் அடிப்படை.  ஏதோ சாதாரண அரசுப் பணிக்கு செல்வதைப் போல அன்றாடம் வீட்டில் இருந்து கிளம்பிப் போய் யூதர்களை, யூதக்குழந்தைகளை கொத்துக் கொத்தாகக் கொன்றுவிட்டு மாலை வீடு திரும்பி எதுவுமே நடக்காததைப் போல தங்கள் பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடிய நாஜிப்படை ஆட்களுக்கும் இதே ஆதிக்க மனநிலைதான் அடிப்படை.

காலம் காலமாக ஒடுக்கப்பட்டவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி அந்த இனத்தின் பெண்களின் மீது கைவைக்கும்போது ஆதிக்கக்காரர்களுக்கு இருந்ததேயில்லை.  கருப்பினத்தவர்களை மிருகங்களைப் போல கப்பலில் கட்டிப்போட்டு கொண்டு போனபோதும் சரி, அவர்களை வைத்து மனிதக்காட்சி சாலைகளை நடத்தியபோதும் சரி, இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மூளைக்கு பதிலாக சாணியை சுமந்துகொண்டு ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரை என பெருமைபேசி குடிசைகளைக் கொளுத்தும்போது சரி, இதுதான் நிலைமை.

நாமெல்லாம் அமைதியான சராசரி குடிமக்கள்.  இது போன்ற நிகழ்வுகளுக்கும் நமக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என அமைதியாக இருக்கிறவர்களிடம் ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.  சர்வசாதாரணமாக உங்கள் அப்பாவோ, அம்மாவோ, மாமாவோ நீங்களோ, "அவரு நம்மாளுதான்," “அவங்க நம்ம கம்யூனிட்டிதான்,”,“நம்ம கம்யூனிட்டிலேயே நல்ல பையனா பாருங்க,” எனப் பேசுவீர்கள் அல்லவா?  அப்படியென்றால் மேலே நடக்கும் அத்தனை வன்முறையிலும் உங்களுக்குப் பங்கு உண்டு.  அடுத்தடுத்த தலைமுறைக்கு சாதி எனும் அழிவு நோயைக் கடத்தும் டெங்கு கொசுக்களாக நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.  அதிலும், ஒரு ஆபத்தும் விளைவிக்காத மிதவாத வார்த்தைகள் என்ற எண்ணத்தில் சர்வசாதாரணமாக உங்கள் குழந்தைகளின் முன் நீங்கள் பேசும் மேலுள்ள வாசகங்கள்,  உங்கள் குழந்தைகளின் முன்னால் நீங்கள் உடலுறவு கொள்வதைவிடவும் மோசமான விளைவுகளை அவர்கள் மனத்தில் ஏற்படுத்தும்.  அதைத்தான் எந்தக் கூச்சமும் இன்றி நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.  உங்களைப் போன்ற யாரோ ஒருவரால் வளர்க்கப்படும் மகன்தான் பிற்காலத்தில் ஏதாவது சாதியத் தலைவனால் மூளைச்சலவை செய்யப்பட்டு ஆதிக்கநோய் முற்றி ‘சாதி சைக்கோ,’ஆகிறான். 

நீங்கள் எதையெல்லாம் மிகவும் சாதாரணம் என நிறுவனமயப்படுத்தி வைத்திருக்கிறீர்களோ, வாழ்க்கை முறையாக மாற்றி வைத்திருக்கிறீர்களோ அவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் மேலுள்ள வன்முறைகள் கட்டியமைக்கப்படுகின்றன.   சாதியப் பிடிமானத்தில் படிநிலைகள் எல்லாம் கிடையாது. சாதியின் மீது கொஞ்சமே கொஞ்சம் பிடிப்பும், உங்கள் சாதிக்காரனைப் பார்த்தவுடன் மனதில் ஏதோ ஒரு மூளையில் பல்பு எரிந்தால்கூட நீங்கள் சாதிவெறியன்தான்.  உங்கள் கைகளிலும் ரத்தம் படிந்திருக்கிறது.  கலாச்சாரம், சாதி, மதம், சொந்தம், பந்தம், கவுரவம், மயிரு, மட்டை எனப் பலக் கருமாந்திரங்களைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் நம் வாழ்வியலை மறுபரிசீலனை செய்து தலைகீழாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 
இங்கே இரண்டே இரண்டு இனம்தான்.  சாதி இருக்கிறது என்கிற ஐந்தறிவு சாதிவெறியர்களின் இனம்.  சாதி இல்லை, எல்லா மனிதனும் சமமே என்கிற ஆறறிவு ஆதிக்க மறுப்பாளர் இனம்.  எனவே இதுவரையிலும் கூட கொஞ்சமே கொஞ்சமாக உங்களுக்குள் சாதிய உணர்வு இருந்தாலும் தயவுசெய்து இந்தப் பக்கம் வந்துவிடுங்கள்.  உயிரோடிருக்கும்போதே பிணமாக நடமாடாதீர்கள்.

-டான் அசோக்